ECONOMYNATIONAL

கடந்தாண்டில் 1,571 போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 27– கடந்தாண்டு முழுவதும் 1,571 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தரநிர்ணய பின்பற்றல் (ஜிப்ஸ்) துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரி அகமது கூறினார்.

சொத்து மதிப்பை அறிவிக்காதது, பொழுதுபோக்கு மையங்களுக்குச் சென்றது, அனுமதியின்றி திருமணம் செய்தது, புகார்களை ஏற்க மறுத்தது, பணம் கேட்டது போன்றவை சம்பந்தப்பட்ட காவல் துறை உறுப்பினர்கள் செய்த குற்றங்களாகும் என்று அவர் சொன்னார்.

உயர்நெறி தொடர்பான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 1993 ஆம் ஆண்டு (நடத்தை மற்றும் உயர்நெறி) பொது அதிகாரிகள்  விதிகளின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர, 23 அதிகாரிகள் குற்றச்செயல் மற்றும் ஊழலிலும் 18 பேர் போதைப் பொருள் வழக்கிலும் 48 பேர் ஷரியா தொடர்பான குற்றங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இதன் அடிப்படையில், அரச மலேசிய போலீஸ்  படை உறுப்பினர்களிடையே உயர் நெறியை வலுப்படுத்தும் முயற்சியாக ஆறு அம்சங்களுக்கு இவ்வாண்டில் தாங்கள் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிர்வாகம்/ கொள்கைப் பணிகள், புகார் மேலாண்மை/நடவடிக்கை/, விசாரணை/ பின்பற்றல், சமயம் மற்றும் ஆலோசனை சேவை ஆகியவையே அந்த ஆறு அம்சங்களாகும் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் அவர் சொன்னார்.


Pengarang :