ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்டம்: ஹராப்பான்-அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 28– கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அந்த மசோதா தொடர்பான பல்வேறு அம்சங்களை சீர்செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்க மற்றும் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் வரும் 31 ஆம் தேதி வியாழக்கிழமை சந்திப்பு நடத்தவுள்ளனர்.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 10 உறுப்பினர்களை உள்ளடக்கிய உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் குழு இச்சந்திப்பில் இடம் பெறும் என்று கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அந்த மசோதாவை தாக்கல் செய்வதில் தமக்குள்ள கடப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் புலப்படுத்தியுள்ளார். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அதனை செம்மைப்படுத்துவதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் அவர் கேட்டுள்ளார் என சைபுடின் தெரிவித்தார்.

அந்த சட்ட மசோதாவிலுள்ள சில ஷரத்துகளை சீர் செய்யும் அல்லது மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர்  எங்களின் கருத்தைக் கேட்டுள்ளார். வழிகாட்டுக் குழுவுக்கு உயிரூட்டும்படி அவரை நாங்கள்  கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த மசோதா  குறித்து விரிவாக ஆராய்வதற்கு அரசாங்கத் தரப்புடன் சந்திப்பு நடத்தவும் இணக்கம் தெரிவித்துள்ளோம் என்றார் அவர்.

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்டவிவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி வான் ஜாபர் கடந்த 24 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :