ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் மருத்துவமனைகள் புனரமைப்பு, புதிதாக நிர்மாணிப்பு- சுல்தான் மகிழ்ச்சி

ஷா ஆலம், மார்ச், 28- சிலாங்கூரிலுள்ள மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கும் புதிதாக நிர்மாணிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிப்பாங் மற்றும் காப்பாரில் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிப்பதற்கும் பந்திங், காஜாங் மற்றும் கோல சிலாங்கூர் மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கும் அமைச்சு எடுத்துவரும் நடவடிக்கைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் பல தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டாலும் மாநிலத்தில் மக்கள் தொகை 70 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நகர்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவதற்கு ஏதுவாக அரசாங்க மருத்துவமனைகள் அவசியம் தேவைப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இருதய நோய் போன்ற கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு செர்டாங் மருத்துவமனையின் இருதய சிகிச்சை ஆய்வு போன்ற நிபுணத்துவ மருத்துவமனைகளை அமைக்கும் சுகாதார அமைச்சின் முயற்சியையும் அவர் பெரிதும் பாராட்டினார்.

மருத்துவனை போன்ற சுகாதார வசதிகளுக்கான கட்டுமானத்திற்கு டெண்டர்கள் கோரும் போது கடுமையான நிர்வாக நடைமுறைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்யுமாறு பொதுப்பணித்துறையை மேன்மை தங்கிய சுல்தான் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில மக்களின் சுகாதார ஈடுசெய்யும் திட்டங்களின் அமலாக்கத்தில் தாமதம் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்த அணுகுமுறை தேவைப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :