ECONOMYHEALTHNATIONAL

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பொது சுகாதார ஆலோசனை மன்றம்- சிலாங்கூர் அரசு அமைக்கும்

ஷா ஆலம், மார்ச் 29- வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனை மன்றத்தை (SELPHAC) மாநில அரசு அமைக்கவுள்ளது.

பொது சுகாதாரம் தொடர்பான துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை இந்த ஆலோசனை மன்றம் கொண்டிருக்கும்   என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிலாங்கூர் மாநில பொது சுகாதார ஆட்சிக்குழுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மாநில அரசு கண்டறிந்துள்ளது.

ஆகவே, சுகாதாரம் தொடர்பான அனைத்து கொள்கைகள், திட்டங்களை திறம்படவும்  சீரான முறையிலும் திட்டமிட்டு செயல்படுத்த மற்றும் கண்காணிக்க முடியும் என்பதை உணர்ந்து இந்த ஆலோசனை மன்றத்தை நிறுவ நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று சித்தி மரியா சமீபத்தில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட  கொள்கைகள் தொடர்பான மாநில அரசின் சிந்தனைக் குழுவாக இந்த ஆலோசனை மன்றம்  செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.

மாநில அரசு சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவை முன்பு  நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இது, கோவிட்-19 நோய் தொற்றைக் கையாள்வதில் மாநில அரசின் சிந்தனைக் குழுவாக செயல்பட்டது.

இந்த குழுவில் முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது, டத்தோ டாக்டர் கிறிஸ்டோபர் லீ குவாக் சூங், பேராசிரியர் டத்தோ டாக்டர் அதீபா கமாருல்ஜாமான், டத்தோ டாக்டர் பட்ஸிலா கமாலுடின், பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், டாக்டர் யாப் வெய் ஆன் மற்றும் டாக்டர் சித்தி மரியா மாமுட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


Pengarang :