ECONOMYHEALTHNATIONALSELANGOR

இருதய சிகிச்சை ஆய்வு மையத்திற்கு வருகை- சுல்தானுக்கு மந்திரி பெசார் நன்றி

ஷா ஆலம், மார்ச் 29- செர்டாங் மருத்துவமனையின் இருதயவியல் ஆய்வு சிகிச்சை மையத்திற்கு (ஐ.சி.எல்.) வருகை புரிய ஒப்புக்கொண்ட மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மக்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  காட்டி வரும் மக்களின்  அக்கறை, பொது சுகாதார திட்டங்களுக்கு எப்போதும்  முன்னுரிமை கொடுப்பதற்குரிய உத்வேகத்தை மாநில அரசுக்கு அளித்துள்ளதாக  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இல்திசாம் சிலாங்கூர் சேஹாட் மற்றும் சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் போன்ற பல்வேறு  திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

நேற்று செர்டாங் மருத்துவமனைக்கு வருகை புரிந்த சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்   கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தை செலவிட்டு ஐ.சி.எல் மையத்தைப் பார்வையிட்டார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

சிலாங்கூரில் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிக்கவும் தற்போதுள்ள சில மருத்துவமனைகளை தரம் உயர்த்தவும்  சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுல்தான் மனநிறைவு தெரிவித்தார்.

சிப்பாங் மற்றும் காப்பாரில் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிக்கவும்  பந்திங், காஜாங் மற்றும் கோல சிலாங்கூரில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தவும் மத்திய  அரசு  மேற்கொண்டு வரும் முயற்சிக்கு  அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :