ECONOMYSELANGOR

ஐ.சீட் மூலம் உணவக, மளிகைக் கடை நடத்துநர்களுக்கு வர்த்தக உபகரணங்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 29– ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா மூலம் உலு சிலாங்கூரைச் சேர்ந்த இரு வணிகர்கள் 13,400 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்.

உணவு அங்காடிக் கடை நடத்துநரான எஸ்,ரோஸ்மேரிக்கு மொத்தம் 6,0600 வெள்ளி மதிப்பிலான ஆறு கதவுகள் கொண்ட இரும்பு அடுப்பு மற்றும் குளிர்பதனப் பெட்டி இம்மாதம் 23 ஆம் தேதி வழங்கப்பட்டதாக உலு சிலாங்கூர் ஐ.சீட் நடவடிக்கை அதிகாரி டினேஷ் செல்வராஜூ கூறினார்.

மளிகைக் கடை நடத்தும் மற்றொரு வணிகரான கே. யோகேஸ்வரன் இம்மாதம் 25 ஆம் தேதியன்று 6,800 வெள்ளி மதிப்புள்ள இரு குளிர் பதனப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த ஐ-சீட் திட்டம் குறித்து விவரித்த சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்திட்டத்திற்கு தேர்வாகும் வணிகர்களுக்கு இடைத்தரகர் அல்லது நிறுவன நியமனம் இன்றி நேரடியாக பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை ஐ.சீட் திட்டத்தில் பங்கேற்பதற்கு செய்யப்பட்ட 250 இதுவரை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு  சமூகத் தலைவர் அல்லது கிராமத் தலைவர் மூலம்  விண்ணப்பிக்கலாம். மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவுடனான கூட்டு கூட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :