ECONOMYNATIONALSELANGOR

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ஐந்து அரசு துறைகளுடன் லுவாஸ் ஒத்துழைப்பு

ஷா ஆலம், மார்ச் 29– சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீர் தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் ஐந்து அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவுள்ளது.

இந்நோக்கத்திற்காக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத்துறை, வானிலை ஆய்வுத்துறை, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட், லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் ஆகிய தரப்பினருடன் மூன்றாண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லுவாஸ் கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலையில் இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஒப்பந்தம் நீர் வள மேலாண்மை, கண்காணிப்பு, மறுசீரமைப்பு, தர பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில நிலையிலான அனைத்துலக நீர் தினத்தின் முதன்மை கோட்பாடாகவும் விளங்குகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மந்திரி புசார், நீர்வளங்கள் மீதான கட்டுப்பாட்டை மேம்படுத்துவது, சுத்திகரிக்கப்படாத நீர் வளம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் தரமான நீர் பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியப் பங்கினை ஆற்றும் என்றார்.


Pengarang :