ECONOMYSELANGOR

மின்- அழைப்பு பொருள் விநியோகிப்பாளர்களுக்கு சொச்சோ பாதுகாப்பு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், மார்ச் 29- இணைய அழைப்பின் வழி பொருள் மற்றும் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன சந்தாவை செலுத்துவதற்கு சிலாங்கூர் அரசு இவ்வாண்டு 46,600 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

சுயத் தொழில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையைச் சேர்ந்த 1,000 பேருக்கு மாநில அரசு தலா வெ.46.60 செலுத்தியதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

உணவு மற்றும் பொருள் பட்டுவாடா தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் எந்தவொரு பாதுகாப்புத் திட்டத்திலும் பங்கு பெறாததை கருத்தில் கொண்டு மாநில அரசு இத்திட்டத்தை அமல் செய்ததாக அவர் சொன்னார்.

இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மோட்டார் சைக்கிளோட்டிகள் சுயத் தொழில் செய்பவர்களாகவும் காப்புறுதி பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் உள்ளனர். இத்தகைய தரப்பினருக்காக மாநில அரசு இந்த சிறப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்றார் அவர்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளரும் செலுத்த வேண்டிய சந்தா தொகை வெ.232.80 ஆகும். பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 80 விழுக்காட்டுக் கழிவைப் பெற்றுள்ளோம். இவ்விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய சொக்சோ தரப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் கிக் கேர் எனப்படும் தற்காலிக வணிக பாதுகாப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

சொக்சோ காப்புறுதி திட்டத்திற்கு மோட்டார் சைக்கிளோட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அந்த பாதுகாப்புத் திட்டத்தில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையை அடுத்தாண்டில் உயர்த்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :