ECONOMYNATIONALPENDIDIKANSELANGOR

எஸ்.பி.எம். இரண்டாம் கட்ட அமர்வில் 90,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் 

மலாக்கா, மார்ச் 30- வரும் ஏப்ரல் மாதம் 5 முதல் மே 19 வரை நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். தேர்வின் இரண்டாம் கட்ட அமர்வில் 85,700 மாணவர்கள் பங்கேற்பர் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ ரட்ஸி ஜிடின் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரத்தியேக காரணங்களுக்காக தேர்வை ஒத்தி வைக்க தேர்வு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள் இத்தேர்வை எழுதுவர் என்று அவர் சொன்னார்.

இறைவன் அருளால் இந்த தேர்வின் இரண்டாம் கட்ட அமர்வு பாதுகாப்பாகவும் சீரான முறையிலும் நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள புலாவ் பியாத்துவிலுள்ள மலாக்கா தொழில்நுட்ப இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற நன்றி கூறும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தேர்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் 23,885 ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் எனக் கூறிய அவர், தேர்வு முடிவுகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தில் வெளியிடப்படும் என்றார்.

எஸ்.பி.எம். தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்பட்டாலும் இத்தேர்வை எழுதிய அனைத்து நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் ஏககாலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :