ECONOMYNATIONALSELANGOR

சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவ இரு தொழிற்சாலைகளை பி.கே.என்.எஸ். நிர்மாணிக்கும்

கோலா சிலாங்கூர், மார்ச் 30– இரு குறைந்த விலை தொழிற்சாலைகளை பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் அடுத்தாண்டு நிர்மாணிக்கவிருக்கிறது.

புறநகர்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அக்கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ மாமுட் அபாஸ் கூறினார்.

கிள்ளான் மற்றும் கோத்தா புத்திரியில் தலா 2.02 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்படவிருக்கும் அந்த நான்கு மாடி தொழிற்சாலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 200 பேர் வர்த்தகம் புரிய முடியும் என்று அவர் சொன்னார்.

சுமார் ஒன்றரை கோடி வெள்ளி செலவிலான இத்தொழிற்சாலை திட்டம் முற்றுப் பெற்றவுடன் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நியாயமான விலையில் அது வாடகைக்கு விடப்படும் என்றார் அவர்.

குறைந்த விலையில் அடுக்குமாடி தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் திட்டம் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை. கிராமப்புறங்களில் வீடுகளிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவக்கூடிய இத்திட்டத்தை  பி.கே.என்.எஸ். நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நிர்மாணிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் டி பள்மா ஈக்கோ ரிசோர்ட் கோலாலம்பூர் தங்கும் விடுதி மறுதிறப்பு விழா காணும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நடத்துநர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை உகந்த சூழலில் நடத்துவதற்குரிய வாய்ப்பினை இத்திட்டம் ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :