ECONOMYNATIONALPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 17 பார்வையற்றோருக்கு எம்.பி.ஐ. நிதியுதவி

கோலாலம்பூர், ஏப் 1- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 17 பார்வையற்றோர் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் மூலம் நிதியுதவி பெற்றனர்.

அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி தவிர்த்து கூடுதலாக இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக எம்.பி.ஐ. தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

மலேசிய கண்பார்வையற்றோர் சங்கத்தின் மூலம் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நிறுவன சமூக கடப்பாட்டின் (சி.எஸ்.ஆர்.) ஒரு பகுதியாக இந்த உதவித் திட்டம் அமைகிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையில் உதவி தேவைப்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார் அவர்.

தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள கண்பார்வையற்றோர் சங்க (எம்.ஏ.பி.) தலைமையகத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எம்.பி.ஐ. கழகத்தின் சி.எஸ்.ஆர். பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் மற்றும் எம்.ஏ.பி. தலைமை செயல்முறை அதிகாரி ஜோர்ஜ் தோமஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ஜோர்ஜ் தோமஸ், இச்சங்கத்திற்கு 65 விழுக்காட்டு வருமானம் பொது மக்களின் நன்கொடை மூலம் கிடைப்பதாக தெரிவித்தார்.

எம்.பி.ஐ. போன்ற அமைப்புகளின் உதவி இல்லாத பட்சத்தில் கண் பார்வையற்றோரின் நலனைக் காப்பது இயலாத காரியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :