ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒரு வாரமாக கோவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது

கோலாலம்பூர், ஏப் 2- கடந்த ஒரு வார காலமாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நாடு நுழைவதற்குரிய சிறப்பான தொடக்கமாக இது கருதப்படுகிறது.

மேலும் நோய்த் தொற்றுக்கான சாத்திய விகிதம் (ஆர்.ஒ/ஆர்.டி.) 1.00 புள்ளிக் கீழ் குறைந்து நேற்று 0.87 ஆகப் பதிவானது.

நாட்டில் நேற்று 17,476 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகிய வேளையில் அவற்றில் 10,623 சம்பவங்கள் சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டன. நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 19 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.

ஆகக் கடைசியாக கடந்த 2022 மார்ச் 28 ஆம் தேதி மிகக்குறைவாக அதாவது 13,336 கோவிட் சம்பவங்களை நாடு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த இதர மாநிலங்களில் கூட கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரையிலான ஒரு வார காலக்கட்டத்தில் குறைவான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஏப்ரல் முதல் தேதி முதல் நாடு எண்டமிக் கட்டத்தில் நுழைவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் கடந்த ஈராண்டுகளாக போராடியப் பின்னர் மக்கள் ஏறக்குறைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஏதுவாக நாடு எண்டமிக் கட்டத்திற்கு திரும்புவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :