ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சுற்றுச்சூழல் குற்றங்கள்-  619 குற்றப்பதிவுகளை சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டது

ஷா ஆலம், ஏப் 5– சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களுக்காக இவ்வாண்டின் முதல் காலாண்டில் 12 லட்சத்து 30 வெள்ளி அபராதத் தொகையை உட்படுத்திய 619 குற்றப்பதிவுகளை சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் துறை வெளியிட்டது.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட 362,000 வெள்ளி அபராதத் தொகையை சம்பந்தப்படுத்திய 181 குற்றப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய எண்ணிக்கை அதிகமானதாகும் என்று சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் நோர் அஸியா ஜாபர் கூறினார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 793 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் போது 321 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதோடு 15 நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

தொழில்துறையினர் சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகளை உயர்ந்த பட்ச நிலையில் பின்பற்றுவதை உறுதி செய்வதையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு அமலாக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள சுற்றுச் சூழல் துறை கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் குற்றப்பதிவுகளின் எண்ணிக்கையும் அபராதத் தொகையும் அதிகரித்ததற்கு தமது துறை அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதே காரணம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :