ECONOMYPBTSELANGOR

வார இறுதியில் நான்கு இடங்களில் சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை 

ஷா ஆலம், ஏப் 6- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலத்தின் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

புக்கிட் அந்தாரா பங்சா மற்றும் லெம்பா ஜெயாவில் வரும் சனிக்கிழமையும் கோத்தா டாமன்சாரா மற்றும் குவாங்கில் ஞாயிற்றுக்கிழமையும் இந்த மலிவு விலை விற்பனைத்  திட்டத்ததை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைருள் முகமது ராஸி கூறினார்.

எனினும், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் குறிப்பிட்ட எந்த இடத்தில் இந்த விற்பனை இயக்கம் நடத்தப்படும் என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

பொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநிலத்தின் 64 இடங்களில் இத்தகைய மலிவு விலை விற்பனைத் திட்டத்தை மாநில அரசு வார இறுதி நாட்களில் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடுத்தர அளவிலான கோழி 12 வெள்ளிக்கும் இறைச்சி கிலோ 35 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு அட்டை 10 வெள்ளிக்கும் கெம்போங் மற்றும் செலாயாங் மீன் கிலோ 8 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் கீழ் வரும் நோன்புப் பெருநாள் வரை கோழி, முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகிய உணவுப் பொருள்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மலிவு விலையில் விற்கும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அறிவித்திருந்தது.


Pengarang :