ECONOMYMEDIA STATEMENT

உயிரைப் பறித்த விபத்து- மது போதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 6– மது போதையில் வாகனம் ஓட்டியதன் மூலம் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக உணவக நிர்வாகி ஒருவர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் அமானினா முகமது அனுவார் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை முகமது நஸ்ரின் ரம்லி (வயது 32) என்ற ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மில்லிகிராம் கூடுதலாக இரத்தத்தில் மது கலந்திருந்த நிலையில் மைவி ரக காரை ஆபத்தான முறையில் ஓட்டிய முகமது நஸ்ரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி ரம்லி அப்துல் அஜித் (வயது 40) என்ற நபரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி பின்னிரவு 12.10 மணியளவில் ஜாலான் கூச்சிங்கில் தலைநகர் நோக்கிச் செல்லும் சாலையில் இக்குற்றத்தைப் புரிந்த தாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, கூடுதல் பட்சம் 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுவதற்கும் பத்து ஆண்டுகளுக்கு வாகனமோட்டும் லைசென்ஸ் முடக்கப்படுவதற்கும் வகை செய்யும் சாலை போக்குவரத்து சட்டத்தின் 44(1)(ஏ) பிரிவின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

முகமது நஸ்ரினை 12,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் வழக்கு முடியும் வரை அவரது வாகனமோட்டு லைசென்ஸ் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.


Pengarang :