ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் ஹராப்பானின் வெற்றிப் பாரம்பரியத்தை கெஅடிலான் தொடர்ந்து பாதுகாக்கும்

ஷா ஆலம், ஏப் 7– கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற  பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணி பெற்ற வெற்றியின் பாரம்பரியத்தை தொடர்ந்து தற்காக்க கெஅடிலான் கட்சி தயாராக உள்ளது.

இதுநாள் வரை அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதற்கு வெற்றி நமக்கு மிக முக்கியம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டில் அனைத்து தொகுதி நிர்வாக குழுக்களும் கலைக்கப்படுவதற்கு முன்னர் மாநில தலைவர் மன்றத்தில் நான் முன்வைக்கும் கடைசி கருத்து இதுவாகும். இதற்கு பிறகு நமக்கு பெரிய சவால் அதாவது 15வது பொதுத் தேர்தல் காத்திருக்கிறது. அதனைக் கருத்தில்  கொண்டு சிலாங்கூரை மேம்பாடடைந்த மாநிலமாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

நேற்று தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில், உதவித் தலைவர் தியான் சுவா ஆகியோரும் கலந்து கொண்டார்.

கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா என்பது குறித்து தாம் கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

காலியாக உள்ள அப்பதவிக்கு போட்டியிடும்படி பல தலைவர்களும் சகாக்களும் தம்மைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :