ECONOMYPBTSELANGORSMART SELANGOR

கார் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதில் சிக்கலா? இ-கூப்பன் முகவரை அணுகுங்கள்

ஷா ஆலம், ஏப் 7- ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) எனப்படும் டிஜிட்டல் செயலி மூலம் கார் நிறுத்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர் அதிகாரப்பூர்வ இ-கூப்பன் முகவர்களை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அணுகுமுறை சுலபமானது என்பதோடு அந்த இ-கூப்பன் முறை குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பும் வாகனவோட்டிகளுக்கு கிடைக்கும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இ-கூப்பன் வாங்கும் அனைவருக்கும் அந்த முகவர் உதவிகளை வழங்குவார். நீங்கள் இ-கூப்பனுக்கான கட்டணத்தைச் செலுத்தியவுடன் அந்த முகவர் உங்கள் காரின் எண்களை அந்த செயலியில் உள்ளீடு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தைக் கவனிப்பதற்கு ஊராட்சி மன்றப் பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த செயலி மூலம் கட்டணம் செலுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை முகவரே சொல்லித் தருவார் என அவர் மேலும் சொன்னார்.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் எஸ்.எஸ்.பி. எனப்படும் மின்னியல் கார் நிறுத்த கட்டண முறை அமல்படுத்தப்படுகிறது.

இதற்கான செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் அல்லது ஹூவாவே ஸ்டோர் மூலம் பதவிறக்கம் செய்யலாம். இந்த மின்னியல் கூப்பன்களை விற்பனை செய்யும் முகவர்களாக கே.கே.மார்ட் மற்றும் 100க்கும் மேற்பட்ட பல்நோக்கு கடைகளை மாநில அரசு நியமித்துள்ளது.


Pengarang :