ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.250,000 விலையில் புக்கிட் ஜெலுத்தோங்கில் வீடமைப்புத் திட்டம்-

ஷா ஆலம், ஏப் 7- முதல் வீட்டை வாங்க விரும்பும் மக்களின் கனவை நனவாக்கும் வகையில் இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங், செக்சன் யு8 பகுதியில் மேலும் ஒரு ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டத்தை மாநில அரசு உருவாக்கவுள்ளது.

மூன்று அறைகள், இரண்டு குளியலறைகளுடன் 1,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த வீடு 250,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த வீடு அனைத்து அறைகளிலும் குளிசாதன வசதி, உடை வைக்கும் அலமாரி, சமையல் கேபினட், குளிர்பதனப் பெட்டி மற்றும் 32 அங்குல தொலைக்காட்சி ஆகிய  அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி இரண்டு குளியலறைகளிலும் நீரை சூடுபடுத்தும் ஹீட்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும், மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் இரு கார் நிறுத்துமிட வசதி செய்து தரப்படும். சுகந்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும் அழகிய காட்சிகளைக் கண்டு களிப்பதற்கும் ஏதுவாக இவ்வீடுகளில் பால்கனி வசதி எற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடுகள் நகர்ப்புறத்தில் கட்டப் பட்டாலும் அனைத்து வசதிகளுடன் கட்டுப்படி விலையில் இவை விற்கப்படுகின்றன. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த விலைக்கு இனியும் வீடு கிடைக்காது என்பதை உறுதிப்பட கூறுகிறேன் என்றார் அவர்.

நாடி செர்காஸ் எனும் பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்த வீடமைப்புத் திட்டத்தை  மேற்கொள்வதாக கூறிய அவர், நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீடமைப்புத் திட்டம் போக்குவரத்து, கல்வி, மார்க்கெட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது என்றார்.

இந்த வீடுகளை வாங்க விரும்புவோர் www.platselangor.com  அல்லது www.rumahidamanbukitjelutung.com  என்ற அகப்பக்கத்தை வலம் வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :