ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை இயக்கம் ஷா ஆலம், கிள்ளானில் ஞாயிறன்று நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 8- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனை திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்த இயக்கம் ஷா ஆலம், கம்போங் பாடாங் ஜாவா ரமலான் சந்தையிலும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் ஊழியர் குடியிருப்பு பகுதியிலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

பொருள் விலையேற்றம் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவும் நோக்கிலான இந்த மலிவு விற்பனை திட்டத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் மேற்கொள்கிறது.

இந்த விற்பனை இயக்கம் மாநிலம் முழுவதும் 64 இடங்களில் வரும் நோன்புப் பெருநாள் வரை மேற்கொள்ளப்படுகிறது.

வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்படும் இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 12 வெள்ளி விலையிலும் இறைச்சி கிலோ 35 வெள்ளி விரையிலும் முட்டை ஒரு தட்டு 10 வெள்ளி விலையிலும் கெம்போங் அல்லது செலாயாங் மீன் கிலோ 8.00 வெள்ளி விலையிலும் விற்கப்படுகிறது.

மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் கீழ் கோழி, முட்டை, இறைச்சி, மீன் ஆகிய உணவுப் பொருள்களை மலிவு விலையில் விற்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கூறியிருந்தது.


Pengarang :