ECONOMYPBTSELANGOR

பரிவுமிக்க வணிக விற்பனைத் திட்டத்திற்கு அமோக ஆதரவு- வெ.650,000 வருமானம்

ஷா ஆலம், ஏப் 10- சிலாங்கூர்  மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தால் (பி.கே.பி.எஸ்.) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட மாநில அரசின் பரிவுமிக்க வணிக விற்பனைத் திட்டத்தின் மூலம் 649,977 வெள்ளி விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று வரை 19 மாநிலச் சட்ட மன்றப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளின் விற்பனையின் அடிப்படையில் இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கழகத்தின் வர்த்தக  மற்றும் சந்தைப் பிரிவு பொது நிர்வாகி ரோஸ்னானி அப்துல் மாலே தெரிவித்தார்.

இதர சந்தைகளை விடக் குறைவான விலையில் தாங்கள் பொருட்களை விற்பனை செய்வதால் உள்ளூர் மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதாக அவர் கூறினார்.

யுபென் எனப்படும் மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின்  ஒத்துழைப்புடன் மாநில  அரசு இத்திட்டத்தை மேற்கொள்வதாக  விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நவீன தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் சொன்னார்.

இன்று, இங்குள்ள  கம்போங் பாடாங் ஜாவா பொது மண்டபத்தில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு  விற்பனை நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

பாடாங் ஜாவா தவிர, கிள்ளான்  தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் சுங்கை பூலோ  ஆகிய பகுதிகளிலும் இந்தப் பரிவுமிக்க வணிக விற்பனை இயக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டது.  10,000 வெள்ளி  முதல் 18,000 வெள்ளி வரையிலான விற்பனையை இவ்வியக்கம் இலக்காகக் கொண்டிருந்தது.

பொருட்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நோன்பு பெருநாள் வரை   மாநிலத்தின் 64 பகுதிகளில்  இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு ஏற்பாடு  செய்துள்ளது.

 

 


Pengarang :