ECONOMY

ஜெலுபு சிறைக் கைதிகள் அறுவர் தப்பியோட்டம்- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

சிரம்பான், ஏப் 11- ஜெலுபு நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணியளவில் தப்பிச் சென்ற ஜெலுபு சிறைக்கைதிகள் அறுவரை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அச்சம்பவத்தில் ஏழு கைதிகள் தப்பிய வேளையில் அவர்களில் ஒரு கைதியான சோஹாய்மி காலிட் (வயது 50) என்பவர் மீண்டும் பிடிபட்டதாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. மஸ்லான் உடின் கூறினார்.

ஜெலுபு சிறைச்சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோங்கோக் பகுதியின் செம்பனைத் தோட்டத்தில் நேற்றிரவு 7.00 மணியளவில் அக்கைதி மீண்டும் பிடிபட்டார் என்று அவர் சொன்னார்.

போலீஸ் காவலிலிருந்து தப்பியோடிய மஸ்லான் சமான (வயது 39), முகமது அமிருடின் கான் (வயது 28), சாஸ்வான் முகமது ஷரிப் (வயது 32), முகமது ஜரிஸான் ஜைனால் (வயது 42), ஷயாரிப் ரோஹ்மாட்(வயது 32) ஜைனுடின் ஆகிய கைதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கைதிகளைத் தேடும் நடவடிக்கையில் நெகிரி செம்பிலான் மாநில  போலீஸ் தலைமையகம் மற்றும் சிறைச்சாலைத் துறையின் மோப்ப நாய்ப் பிரிவின் உதவி நாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைதிகள் தப்பியோடியதற்கு அலட்சியப் போக்கு உள்ளிட்ட காரணங்களை மையமாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :