ECONOMYNATIONALTOURISM

சுற்றுலாத் துறை மூலம் 2025 இல் வெ.7,700  கோடி வருமானம் ஈட்ட அமைச்சு இலக்கு

கோலாலம்பூர், ஏப் 11– வரும்  2025 ஆம் ஆண்டில் 1.6 கோடி  முதல் 2.2 கோடி வரையிலான அனைத்துலக சுற்றுப் பயணிகளின் வருகையின் மூலம் 4,700 கோடி  முதல் 7,700 கோடி வெள்ளி வரையில் வருமானம் ஈட்டுவதை சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

ஏப்ரல் 1 முதல் தேதி தொடங்கி  நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் வழி சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைகளும் அது சார்ந்த இதரத் துறைகளும் வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

ஆகவே, இந்த ஆண்டு சுமார் இருபது லட்சம் அனைத்துலக  சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம்  860 கோடி வெள்ளி வருமானத்தைப் பெற சுற்றுலா அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. இருப்பினும், இது ஒரு ஆரம்பக் கணிப்பு மட்டுமே. இது  நடப்புச்  சூழலுக்கேற்ப மாறுபடும் என்று அவர் சொன்னார்.

ஓலா & ஒலி சென். பெர்ஹாட் நிறுவன ஏற்பாட்டில் நேற்று  இங்கு நடைபெற்ற கிட்ஸ் சேஃப் டிராவல் எனும் சிறார் சுற்றுலா பாதுகாப்பு இயக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

போக்குவரத்து, உபசரணை மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பின் மூலம் சுற்றுலா மற்றும் கலாசார சூழல் சீராக செயல்படுவதையும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்று நான்சி மேலும் கூறினார்.


Pengarang :