ECONOMYSELANGOR

மலிவு விற்பனையை மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

ஷா ஆலம், ஏப் 11– தரமான உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் மாநில அரசின் மக்கள் பரிவு விற்பனை இயக்கம் பொருள்களுக்கான அளவுக் கட்டுப்பாடின்றியும் தொடர்ச்சியாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை இயக்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக பொருள் விலையேற்றம் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தரப்பினருக்கு பெரிதும் உதவி புரிவதாக ஜக்காரியா தாயிப் (வயது 52) கூறினார்.

கோழி, முட்டை,மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதற்கு ஏதுவாக இந்த விற்பனைத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தளர்வுகள் வழங்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இங்குள்ள பாடாங் ஜாவாவில் நேற்று நடைபெற்ற மலிவு விலை விற்பனைத் திட்டத்தின் போது சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மலிவு விற்பனைத் திட்டம் பொது மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பெரிதும் நன்மை தருவதாக உள்ளது என்று மொக்தார் ஓமார் (வயது 56) குறிப்பிட்டார்.

அடிமட்ட மக்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக இத்திட்டம் வாரந்தோறும் அமல்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும். மற்ற கடைகள் அல்லது பேரங்காடிகளுக்கு சென்றால் நிச்சயமாக விலை அதிகமாகவே இருக்கும் என்றார் அவர்.

பொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் வரும் நோன்புப் பெருநாள் வரை மாநிலத்தின் 64 பகுதிகளில்  இந்த மலிவு விற்பனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.


Pengarang :