ECONOMYMEDIA STATEMENT

சுங்கத் துறையின் அதிரடி சோதனையில் மதுபானம், சுருட்டு கடத்தல் முயற்சி முறியடிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஏப் 14- இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு நடவடிக்கைகளில் 468,994 வெள்ளி மதிப்பிலான சுருட்டு மற்றும் மதுபானங்கள் அடங்கிய ஆறு கொள்கலன்களை நாட்டிற்குள் கடத்தி வர மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த சுருட்டு மற்றும் மதுபானத்திற்கான சுங்க மற்றும் கலால் வரி மதிப்பு சுமார் 50 லட்சம் வெள்ளியாகும் என்று சுங்கத் துறையின் மத்திய பிராந்தியத்திற்கான துணைத் தலைமை இயக்குநர் முகமது சப்ரி சஹாட் கூறினார்.

இவ்விரு சோதனை நடவடிக்கைகளையும் சுங்கத் துறையின் மத்திய பிராந்தியம் 1 (கோலாலம்பூர்) அமலாக்க பிரிவு மேற்கொண்டதாக கூறிய அவர், இறக்குமதியாளர் கொடுத்த விபரப் பட்டியலுக்கும் பொருள்களை ஏற்றுவதற்கான பில்லில் காணப்பட்ட விபரங்களுக்கும் வேறுபாடு காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த கடத்தல் முயற்சி கண்டு பிடிக்கப்பட்டது என்றார்.

கோலக் கிள்ளான், வடக்கு மற்றும் மேற்கு துறைமுகங்களில் கடந்த மார்ச் 2 முதல் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மதுபானங்கள் அடங்கிய 5 கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கொள்கலன்களிலிருந்து  416,254 வெள்ளி மதிப்பிலான 75,420.86 லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது. இதற்கான வரியின் மதிப்பு 19 லட்சத்து 85 ஆயிரத்து 636 வெள்ளியாகும் என்றார் அவர்.

பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மேற்கு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில்  பிரசித்தி பெற்ற சுருட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்று கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மொத்தம் 52,740 வெள்ளி மதிப்பிலான இந்த சுருட்டுகளுக்கு செலுத்த வேண்டிய வரி 30 லட்சத்து 90 ஆயிரத்து 114 வெள்ளியாகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் 1067 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :