ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரந்தாவ் பாஞ்சாங்கில் பட்டாசு, ஜீன்ஸ் கடத்தல் முயற்சி முறியடிப்பு

கோத்தா பாரு, ஏப் 14– சுமார் 52,500 வெள்ளி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஜீன்ஸ் கால் சட்டைகளை இங்குள்ள ரந்தாவ் பாஞ்சாங் வழியாக கடத்தி வர மேற்கொள்ளப்பட்ட முயற்சியை  சிறப்பு நடவடிக்கைப் படையின் 7 பட்டாளம் முறியடித்தது.

நேற்று மாலை 4.45 மணியளவில்  செரோங்கா எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பூசிச் சோதனையின் போது நாஸா சித்ரா ரக காரை ஓட்டிய நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அக்காரை நிறுத்தி சோதனையிட்டதாக அப்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி சூப்ரிண்டெண்டன் அஸாரி நுசி கூறினார்.

அக்காரை சோதனையிட்ட  போது அதில் சுமார் 10,000 வெள்ளி மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய 264 பெட்டிகள் மற்றும் 425 ஜீன்ஸ் ஆகியவை காரின் இருக்கையிலும் பின்புறத்திலும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தாய்லாந்திலிருந்து சட்டவிரோத வழிகள் மூலம் இங்கு கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் இப்பொருள்கள் கோத்தா பாரு வட்டாரத்தில் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.

கைது செய்யப்பட்ட காரின் ஓட்டுநர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருள்களை மேல் நடவடிக்கைக்காக ரந்தாவ் பாஞ்சாங் போலீஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளோம்.

இச்சம்பவம் தொடர்பில் 1957 ஆம் ஆண்டு வெடி மருந்துச் சட்டத்தின் 8 வது பிரிவு மற்றும் 1961 ஆம் ஆண்ட விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :