ECONOMYPBTSELANGOR

செமினியில் மலிவு விற்பனைத் திட்டத்தில் பொருள் வாங்கும் 100 பேருக்கு விலைக்கழிவு கூப்பன்

காஜாங், ஏப் 18- மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தில் பொருள் வாங்கிய 100 பேருக்கு 50 விழுக்காடு விலைக்கழிவை வழங்கும் பற்றுச் சீட்டுகளை செமினி சட்டமன்ற சேவை மையம் வழங்குகிறது.

அந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் பொருள்களை வாங்குவதற்கு முன்பதிவு செய்த 100 பேருக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தொகுதி சேவை மையத்தின் நிர்வாகி நோர் ஸூசைலா அப்துல் கனி கூறினார்.

முன்பதிவு செய்தவர்கள் இந்த விற்பனையின் போது வந்த 50 விழுக்காட்டு கழிவைப் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் 100 வெள்ளிக்கு பொருள் வாங்கும் பட்சத்தில் 50 வெள்ளி கட்டணம் செலுத்தினால் போதுமானது. எஞ்சிய தொகையை சேவை மையம் ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.

இந்த விற்பனைத் திட்டத்தில் கோழி, முட்டை மற்றும் இறைச்சி அதிகம் விற்பனையானதாக அவர் சொன்னார். இங்குள்ள தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு விலை விற்பனைத் திட்டத்தின்  போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருள் விலையேற்றத்தினால் சுமையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருள் விலையேற்றத்தினால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கி நோன்புப் பெருநாள் வரை இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை 62 இடங்களில் நடத்துகிறது.


Pengarang :