ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் மீண்டும் குடியேற அனுமதி

ஷா ஆலம், ஏப் 19- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட செலாயாங் பாரு, தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்தவர்கள் மீண்டும் அந்த வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அங்கு வசிக்கும் 38 குடும்பத்தினரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் நோர் அஸ்லினா அப்துல் அஜிஸ் கூறினார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து குடியிருப்பாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அந்த கட்டிடம் வசிப்பதற்கு பாதுகாப்பானது என்பதை நுட்ப இலாகா அதிகாரிகள் உறுதி செய்துள்ளதோடு அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

நுட்பக் குழுவினருடன்  கடந்த மாதம் 29 ஆம் தேதி அப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட வருகையின் போது வீடுகளை காலி செய்ய ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஏப்ரல் முதல் தேதியுடன் மீட்டுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டதோடு அதன் உரிமையாளர்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சரி செய்யும் பணி இம்மாதம் 23 ஆம் தேதி முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நிலச்சரிவு சம்பவம் காரணமாக தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசு உதவித் தொகையாக தலா 1,000 வெள்ளியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :