ECONOMYMEDIA STATEMENT

அந்நியத் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தில் மோசடி- நான்கு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், ஏப் 20– அந்நியத் தொழிலாளர்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் (ஆர்.டி.கே.) மோசடி புரிந்ததாக நம்பப்படும் மூன்று அந்நிய நாட்டினர் மற்றும் ஒரு உள்நாட்டவரை உள்ளடக்கிய கும்பலை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

இருபது முதல் 47 வயது வரையிலான அந்த நால்வரும் தலைநகரில் உள்ள ஓரு அலுவலகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமி டாவுட் கூறினார்.

அக்கும்பலிடமிருந்து ஆர்.டி.கே. திட்டத்தில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டதாக நம்பப்படும் வங்காளதேசம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் 264 அனைத்துலக கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த மோசடி நடவடிக்கையின் அன்றைய வருமானம் என கருதப்படும் 7,270 வெள்ளி ரொக்கமும் அந்த அலுவலகத்திலிருந்து  பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி நடவடிக்கை மூலம் அக்கும்பல் 20 லட்சம் வெள்ளி வரை இதுவரை சம்பாதித்துள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.

தற்போது நடைமுறையில் இல்லாத அவுட்சோர்சிங் எனப்படும் வெளி சேவை வழங்கல் நிறுவனங்களைப் போன்ற பாவனையில் இயங்கி வந்த இத்தரப்பினர் ஆர்.டி.கே. திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டாவை பெறுவதற்காக செயல்படாத நிறுவனங்களைப் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலா நிறுவனம் ஒன்றை பதிவு அலுவலகமாகவும் அந்நிய நாட்டினரிடமிருந்து ஆர்.டி.கே திட்டப் பதிவுக்காக கடப்பிதழ்களைப் பெறுவது மற்றும் பணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கான மையமாகவும் அக்கும்பல் பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :