ECONOMYMEDIA STATEMENT

“நண்பர்களைப் பின்பற்றி நாங்களும் தப்பியோடினோம்“- பிடிபட்ட ரோஹிங்கியா கைதிகள் வாக்குமூலம்

பண்டார் பாரு, ஏப் 21– நண்பர்களைப் .பின்பற்றி தடுப்புக் காவல் முகாமிலிருந்து தாங்கள் தப்பியோடியதாக அமலாக்கப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்பட்ட இரு ரோஹிங்கியா கைதிகள் கூறியுள்ளனர்.

இங்குள்ள ஜாலான் சுங்கை ரம்பாய் பகுதியில் குண்டர் கும்பல், சூதாட்டம் மற்றும் ஒழுங்கீனச் செயல் தடுப்பு பிரிவு போலீசார் (டி7) மேற்கொண்ட நடவடிக்கையில் அவ்விருவரும் பிடிபட்டனர்.

முகாமிலிருந்து தப்பியோடிய பிறகு சுமார் 18 மணி நேரம் செம்பனைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 30 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் நேற்றிரவு 9.58 மணியளவில் மறுபடியும் பிடிபட்டனர்.

அந்த முகாமின் கதவு மற்றும் இரும்புக் கதவை உடைத்த கும்பலில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்றும் எனினும் பயம் காரணமாக அவர்களுடன் சேர்ந்து தாங்களும் அங்கிருந்து தப்பியோடியதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அந்த தடுப்புக் காவல் முகாம் அருகிலுள்ள பகுதிகளில் பதுங்கியருக்கும் எஞ்சிய கைதிகளை தேடி பிடிக்கும் பணியில் அமலாக்கப் படையினர் டி7 பிரிவினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சுங்கை பாக்காப்பில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 664 ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளில் 528 பேர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கதவை உடைத்துக் கொண்டு தப்பினர்.

அவர்களில் 357 பேர் பின்னர் பிடிபட்ட வேளையில் அறுவர் தப்பியோட முயன்ற போது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 168 வது கிலோ மீட்டர் பகுதியில் வாகனங்களால் மோதுண்டு உயிரிழந்தனர்.


Pengarang :