ECONOMYMEDIA STATEMENTSELANGOR

22 பொருள்களுக்கான உச்சவரம்பு விலைத் திட்டம் ஏப்.26 முதல் மே 6 வரை அமல்

புத்ரா ஜெயா, ஏப் 21– இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு பெருநாள் உச்சவரம்பு விலைத் திட்டம் இம்மாதம் 26 முதல் மே 6 வரை அமல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 22 அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் பட்டியலில் வைக்கப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை மற்றும் கையிருப்பை நிலைப்படுத்துவதற்காக 2011 ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடல் உணவு வகைகள், உலர்ந்த உணவுப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகிய பொருள்கள் இத்திட்டத்தில் உள்ளடங்கியிருக்கும்.  பெருநாளுக்கு ஏழு நாள் முன்னதாக  தொடங்கும் இத்திட்டம் பெருநாளுக்குப் பின்னர் மூன்று நாள் கழித்து முடிவுக்கு வரும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள தமது அமைச்சில் 2022 நோன்புப் பெருநாளுக்கான உச்சவரம்பு விலைத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த பெருநாள் கால உச்சவரம்பு விலைத் திட்டத்தில் கோழி இடம் பெறாதது குறித்து வினவப்பட்ட போது,  கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட கோழி மற்றும் முட்டைக்கான விலை நிர்ணய அமலாக்கம் வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வரை அமலில் உள்ளதாக அவர் பதிலளித்தார்.


Pengarang :