ECONOMYMEDIA STATEMENT

தப்பியோடிய 424 ரோஹிங்கியா கைதிகள் மீண்டும் பிடிபட்டனர்- 104 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சிப்பாங், ஏப் 22- சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை முகாமிலிருந்து தப்பியோடிய ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளில் 104 பேரை போலீசார் இன்னும் வலைவீசி தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 7.00 மணி நிலவரப்படி, அம்முகாமிலிருந்து தப்பியோடிய 528 கைதிகளில் 424 பேர் மீண்டும் பிடிபட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
அவர்கள் அனைவரும் நீண்ட காலமாக அதாவது ஈராண்டுகளுக்கும் மேலாக அந்த  முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

அந்த ரோஹிங்கியா அகதிகளை மியன்மார் அரசாங்கம் தங்கள் பிரஜைகளாக அங்கீகரிக்காததோடு அவர்களை ஏற்றுக் கொள்ளவும் மறுப்பதால் தாயகத்திற்கு அவர்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களை தாயகத்திற்கு அனுப்புவதாக இருந்தால் எந்த நாட்டிற்கு அனுப்புவது? அதுவே அதுவே எங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்று நேற்று இங்கு நடைபெற்ற உயர்நெறி மீதான நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் மையத்திலிருந்து 528 ரோஹிங்கியா தடுப்புக் காவல் கைதிகள் தப்பினர். தப்பும் முயற்சியாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவர்களில் அறுவர் வாகனங்களால் மோதுண்டு உயிரிழந்தனர்.


Pengarang :