ECONOMYMEDIA STATEMENT

தப்பியோடிய 96 ரோஹிங்கியா கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

அலோர்ஸ்டார், ஏப் 22- சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாமிலிருந்து கடந்த புதன் கிழமை தப்பிச் சென்ற ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளில் 96 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இன்று அதிகாலை 6.00 மணி வரை 76 ஆண்கள், 9 பெண்கள், 7 சிறுமிகள்  மற்றும் 4 சிறார்கள் இன்னும் தலைமறைவாக இருந்து வருவதாக கெடா மாநில போலீஸ் தலைவர் வான் அசான் வான் அகமது கூறினார்.

இதுவரை, 218 ஆண்கள், 88 பெண்கள், 65 சிறார்கள் மற்றும் 61 சிறுமிகளை உள்ளடக்கிய 432 ரோஹிங்கியா கைதிகளை தாங்கள் மீண்டும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தப்பியோடியவர்களை தேடும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அவர்கள் குறித்த தகவலறிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

தற்போது 23 பேர் சுங்கை பாக்காப் தடுப்புக் காவல் முகாமில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த முகாமிலிருந்து 528 கைதிகள் கடந்த புதன்கிழமை அதிகாலையில் தப்பினர். அவர்களில் அறுவர் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது வாகனங்களால் மோதுண்டு உயிரிழந்தனர்.


Pengarang :