ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் இரண்டாவது வெறிநாய்க்கடி சம்பவம் – 85 வயது முதியவர் பாதிப்பு

ஷா ஆலம், ஏப் 25– சிலாங்கூர் மாநிலத்தில் இரண்டாவது வெறிநாய்க் கடி சம்பவம் பதிவாகியுள்ளது. கோல லங்காட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் இந்நோய்க்கு ஆளானது இம்மாதம் 22 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

வெறிநாய்க் கடிக்கு ஆளான அந்த முதியவர் இம்மாதம் 20 ஆம் தேதி கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாஹாரி ஙகாடிமான் கூறினார்.

இரத்த சோகை காரணமாக தெலுக் பங்கிளமான காராங் சுகாதார மையத்தில் தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் பின்னர் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த முதியவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரின் வலது காலில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறாமலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இருவாரங்களாக அவர் தலைவலி மற்றும் பசியின்மையால் அவதியுற்று வந்துள்ளார் என்றார் அவர்.

இரு மாதங்களுக்கு முன்னர் அந்த முதியவர் கேரித் தீவு பகுதியில் உள்ள தனது இருப்பிடத்திற்கு அருகே வெறிநாய்க்கடிக்கு ஆளானதாவும் ஷாஹாரி குறிப்பிட்டார்.

அந்த முதியவரின் முதுகெலும்பிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மற்றும் பயோப்ஸி  சோதனையை மருத்துவ ஆராய்ச்சி கழகம் கடந்த 22 ஆம் தேதி மேற்கொண்டதாக கூறிய ஷாஹாரி, அச்சோதனை முடிவுகள் மூலம் அவருக்கு வெறிநாய்க் கடி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.


Pengarang :