ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

தடுப்புக் காவல் முகாம்களில் நெரிசலா?  குற்றச்சாட்டை மறுத்தது குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர், ஏப் 27- நெகிரி செம்பிலான், லெங்கேங் குடிநுழைவுத் துறைத் தடுப்புக் காவல் முகாமில் நெரிசல் மிகுந்த காணப்படும் வேளையில் மேலும் மூன்று முகாம்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான குற்றச்சாட்டை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது.

மூன்று தற்காலிக தடுப்புக் காவல் முகாம்கள் உள்பட நாட்டிலுள்ள 21 முகாம்களில் 21,150 பேர் தங்குவதற்கான வசதி உள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமி டாவுட் கூறினார்.

எனினும், இம்மாதம் 24 ஆம் தேதி வரை அந்த முகாம்களில் 17,000 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். அவர்களில் 12,895 ஆண்கள், 3,211 பெண்கள், 851 சிறார்கள் 677 சிறுமிகளும் அடங்குவர். சிறார்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

நெகிரி  செம்பிலான் லெங்கேங் தடுப்புக் காவல் முகாமில் 800 ஆண்கள் மற்றும் 200 பெண்கள் உள்பட 1,000 பேர் தங்குவதற்கு வசதி உள்ளதாக கூறிய அவர், இம்மாதம் 24 ஆம் தேதி வரை அம்முகாமில் 779 பேர் மட்டுமே தங்கியுள்ளனர் என்றார்.

அம்முகாம்களில் மனித ஆற்றல் குறித்து கருத்துரைத்த அவர், அனைத்து முகாம்களில் நிரப்பப்படவேண்டிய காலியிடங்கள் குறித்து ஆய்வு கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தடுப்புக் காவல் முகாம்கள் உள்பட காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கான பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :