ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சொந்த ஊர்களுக்குச் செல்வது குறித்து தகவல் தருவீர்- சிலாங்கூர் போலீஸ் வேண்டுகோள்

டிங்கில், ஏப் 28- நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் அப்பயணம் குறித்து போலீசாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

பெருநாளின் போது வெளியூர் செல்ல விரும்புவோர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள டிங்கில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் சிலாங்கூர் மாநில நிலையிலான 18 வது ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு இயக்கம் இன்று வெள்ளிக் கிழமை தொடங்கி வரும் மே மாதம் 8 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும்.

சாலைகளில்  விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, வீடு புகுந்து திருடும் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்கு செல்வோரின் சொத்துகளை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :