ECONOMYMEDIA STATEMENT

பட்டாசு, வாணவெடி அழிப்பு எஸ்.ஒ.பி. விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும்

கோலாலம்பூர், ஏப் 28– பட்டாசுகள் மற்றும் வாணவெடிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மறுஆய்வு செய்யும் பணியை நீதிமன்றத்துடன் இணைந்து காவல் துறை மேற்கொள்ளும்.

நேற்று முன்தினம் செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

அந்த வெடி பொருள்களை பாதுகாப்பான முறையில் அழிப்பது தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் இரசாயன இலாகாவின் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பட்டாசு மற்றும் வாணவெடிகளின் அளவு மிகப்பெரியது என்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இதனிடையே, நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் நிகழ்ந்த அந்த வெடிச் சம்பவத்தில் ஏழு வீடுகளின் கூரைகள் மற்றும் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டது தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றுள்ளதாக செந்துல் மாவட்ட போலீஸ்  தலைவர் ஏசிபி பே எங் லாய் கூறினார்.

இச்சம்பவத்தில் விசாரணைக்கான சாட்சிப் பொருள்களான 18 கார்கள் மற்றும் இரு லோரிகளும் இவ்விபத்தில் முற்றாக எரிந்து நாசமானதாக கூறிய அவர், எனினும், சேத மதிப்பு இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :