ECONOMYWANITA & KEBAJIKAN

உயர்கல்வி நிறுவனப் பயிற்சியில் பங்கேற்க தனித்து வாழும் தாய்மார்கள், பி40 பிரிவினருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஏப் 29– சிலாங்கூர் தொழிலாளர் செயலாக்கத்திறன் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) ஏற்பாட்டில் தனித்து வாழும் தாய்மார்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த மகளிர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உயர்கல்வி நிறுவனப் பயிற்சியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஒப்பனை, மருத்துவச்சி, மேலாண்மை, மூத்த குடிமக்கள் பராமரிப்புத் திட்டம் மற்றும் சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக ஏற்பாட்டு ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தொழிலாளர் செயலாக்கத் திறன் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இத்திட்டம் வெண்டி கொன்பைன்மேண்ட் சென். பெர்ஹாட், பி பியூட்டி எலிகண்ட் சென். பெர்ஹாட், சீனியர் கேர் அகாடமி சென். பெர்ஹாட், அகாடமி ஜே அண்ட் டபள்யூ சென்.பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முதன் முறையாக மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டத் தரப்பினர் தாங்கள் சார்ந்துள்ள துறைகளில் ஆக்கத்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இதில்  பங்கேற்போருக்கு தொழில்சார்ந்த பல்கலைக்கழக டிப்ளோமா சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்பு மேலும் பிரகாசமாக இருக்கும். அதோடு மட்டுமின்றி மேலும் அதிகமான தொழில் முனைவோரை உருவாக்குவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சிகளுக்கு விதிக்கப்படும் 24,000 வெள்ளி கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஏற்பாட்டு நிறுவனங்கள் 100 விழுக்காடு முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எனக் கூறிய அவர், பயிற்சிகளின் பிரிவுக்கேற்ப வெ.2,500 முதல் வெ. 3,500 வரை நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும் என்றார்.

இந்த பயிற்சி இரண்டரை ஆண்டு காலப் பயிற்சி ஹைப்ரிட் முறையில் அதாவது இயங்கலை வாயிலாகவும் நேரடி பங்கேற்பின் மூலமாகவும் நடத்தப்படும் என அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் ஆர்ட்ஸ்லெண்ட்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் கலைப் பயிற்சி வழங்கப்படும் தகவலையும் அவர் வெளியிட்டார்.
ஐந்து முதல் 12 வயது வரையிலான சிறார்கள் இந்த பயிற்சியில் பங்கு கொள்ளலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :