ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாள் பயணம்- 89,976 இரயில் டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு உள்ளன

கோலாலம்பூர், ஏப் 30– நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோரின் வசதிக்காக இன்னும் 89,976 கிரேத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) இரயில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளன.

இம்மாதம் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு மின்சார இரயில்(இ.டி.எஸ்.), கூடுதல் இ.டி.எஸ் (கே.எல். சென்ட்ரல்-பாடாங் புசார்), எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமோரான், எக்ஸ்பிரஸ் செலாத்தான், ஷட்டல் தீமோரான் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் கெலுவார்கா மலேசியா ஆகியவற்றை உள்ளடக்கிய கே.டி.எம். இண்டர் சிட்டி சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் கைவசம் உள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

எனினும், கே.எல். சென்ட்ரல் முதல் கிளந்தான் மாநிலத்தின் தும்பாட் நகர் வரையிலான சிறப்பு மலேசிய குடும்ப பயணத் தடத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

இத்தடத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 180 இருக்கைகளுக்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டன என்று நேற்று கே.எல். சென்ட்ரல் இரயில் முனையத்தில் பயணிகளுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த பெருநாள் காலத்தை முன்னிட்டு 244,502 இரயில் டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 154,526 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :