ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டி-  கராத்தே வீரர் இளமாறன்  முதல் பதக்கம் வென்றார்

கோலாலம்பூர், மே 4 - பிரேசிலின் காக்சியாஸ் டூ சுல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி.இளமாறன் நாட்டின் முதல் பதக்கத்தை வென்றார்.

84 கிலோவுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான குமித்தே பிரிவின் இறுதிப் போட்டியில் 22 வயதான இளமாறன் வெள்ளிப் பதக்கம் பெறறார். இறுதியாட்டத்தில்  அவர் உக்ரேனின் மக்னோ ஒலெக்சானரிடம் தோல்வியைத் தழுவினார்.

 இளமாறன் முன்னதாக முதல் சுற்றில் பிரேசிலின் செர்ஜியோ கார்சியாவை தோற்கடித்தார். அதனைத் தொடர்ந்து காலிறுதிப் போட்டியில் இஸ்ரேலின் அவி போக்லர் மற்றும் அரையிறுதிப் போட்டியில்  ஈரானின் அப்டோல்கஃபர் எபாஹிம் ஆகியோரை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு அவர் தகுதி பெற்றதாக மலேசிய காதுகேளாதோர் விளையாட்டு சங்கம் கூறியது.

கடந்த நவம்பர் மாதம் ஈரானின் தெஹ்ரானில் நடந்த உலக காது கேளாதோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் முதல் பதக்கமாக  வெண்கலத்தை கைப்பற்றியதன் மூலம் இளமாறன் வரலாறு படைத்தார்.

 மே 1 முதல் மே 15 வரை பிரேசிலில் நடைபெறும் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் 70 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1,956 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு காது கேளாதோர் ஒலிம்பிக்கில் சாதனை படைத்த இளமாறனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எங்கள் தேசிய காதுகேளாத விளையாட்டு வீரருக்கு வாழ்த்துகள். இளமாறன் தேசிய வீரர்! அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ஏனெனில் தனது  முதல் காது கேளாதோர் ஒலிம்பிக்கில்  போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pengarang :