ECONOMYNATIONAL

சிறார்கள் காணாமல் போகும் சம்பவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதில் கவனம் தேவை – போலீஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 5– சிறார்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்வது ஒரு வகையில் காவல் துறைக்கு பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.

எனினும், இவ்வாறு தகவல்களைப் பரப்பும் போது காணாமல் போன சிறார்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறார்கள் காணாமல் போனது தொடர்பான தகவல்களைப் பரப்ப விரும்பும்   பெற்றோர்கள்  அல்லது பொது மக்கள் அதற்கான சரியான தளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.

சிறார்கள் காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர் முதலில் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்பதோடு அத்தகவலை பொதுமக்களிடம் பரப்பும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

காணாமல் போன சிறார்கள் குறித்த விரிவான அளவிலும் சரியான முறையிலும் மக்களிடம் சேர்வதை உறுதி செய்வதில் சீரான செயலாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) காவல் துறை கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போன சிறார்கள் பிணைப்பணத்திற்காக கடத்தப்படவில்லை அல்லது அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றால் மட்டுமே பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் அத்தகவல் பகிரப்படும் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

காவல் துறை மூலம் பகிரப்படும் தகவல்களில் காணாமல் போன சிறார்களின் புகைப்படம், பெயர், புகார் எண் மற்றும் விசாரணை அதிகாரியின் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :