ECONOMYMEDIA STATEMENT

புக்கிட் பிந்தாங் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

கோலாலம்பூர், மே 5-  புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூச்சோங்கிலுள்ள குடியிருப்பு ஒன்றில்  நேற்றிரவு 8.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 47 மற்றும் 51 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ்  தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களிடமிருந்து .38 ரக ரிவோல்வர், பரேட்டா பகுதி தானியங்கி கைத்துப்பாக்கி, 14 தோட்டாக்கள் சிவப்பு நிற ஹோண்டார் ஆர்.எஸ். 150 ரக மோட்டார் சைக்கிள், இரு கவசத் தொப்பிகள், மூன்று கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அந்த துப்பாக்கிளில் ஒன்று பயன்படுத்தப்பட்டதாக இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை அறை எடுத்து தங்கிய 49 வயது ஆடவர் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

இரவு 7.00 மணியளவில் அந்த ஆடவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஹோட்டல் பணியாளர் ஒருவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் மீது கடத்தல், கொலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட 14 குற்றப்பதிவுகள் உள்ளதாக கூறிய அஸ்மி, இக்கொலை தொடர்பில் முதலாவது சந்தேகப் பேர்வழியை சம்பவ இடத்தில் அன்றைய தினம் தாங்கள் கைது செய்ததாகத் தெரிவித்தார்.

கொலையுண்ட நபர், முதலாவது சந்தேகப் பேர்வழி மற்றும் நேற்று கைதான இருவர் உள்ளிட்ட அந்த நால்வரும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் அந்த ஹோட்டல் அறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :