MEDIA STATEMENTNATIONAL

தலைநகரில் சாலை பாதுகாப்பு சோதனை- 1,250 குற்றப்பதிவுகள் வெளியீடு- 11 பேர் கைது

கோலாலம்பூர், மே 8- கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று தினங்களாக தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட ஓப் உத்தாமா நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 1,250 வாகனமோட்டிகளுக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

பதினெட்டாவது ஓப் செலாமாட் இயக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 15 முதல் 47 வயது வரையிலான 11 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் ஏசிபி ஷரிபுடின் முகமது சாலே கூறினார்.

அவர்களில் எண்மர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காகவும் இருவர் வாகனங்களில் போலி எண் பட்டையைப் பயன்படுத்தியதற்காகவும் ஒருவர் திருட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

தலைநகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஓப் உத்தாமா சோதனை நடவடிக்கைக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருளைப் பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருளை வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் அவர் குறிப்பிட்டார்.

வாகனங்களின் புகைப் போக்கியை மாற்றியமைத்த குற்றத்திற்காக 22 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்  மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை நடவடிக்கையை சாலை போக்குவரத்து இலாகா மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை மேற்கொண்டன. புகைப் போக்கியை பழைய நிலைக்கு மாற்றும்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது என அவர் தெரிவித்தார்.

 


Pengarang :