ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வேக வரம்பை மீறும், வரிசையை முந்திச் செல்லும் குற்றங்கள் அதிகம் பதிவு

ஜோகூர் பாரு, மே 9– ஜோகூர் மாநிலத்தில் கடந்த ஒன்பது நாட்கள் அமலில் இருந்த ஓப் செலாமாட் இயக்கத்தின் போது வேக வரம்பை மீறுவது மற்றும் வரிசையை முந்திச் செல்வது ஆகியவை அதிகம் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து குற்றங்களாகும்.

கடந்த சனிக்கிழமை வரை வேக வரம்பை மீறியதற்காக 23,434 குற்றப்பதிவுகளும்  வரிசையை முந்திச் சென்றதற்காக 1,432 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டதாக ஜோகூர் மாநில சாலைப் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் டி.எஸ்.பி. கைருள் அஸார் இஸ்மாயில் கூறினார்.

சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்றதற்காக 677 வாகனமோட்டிகளுக்கும் வாகனங்களைச் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியதற்காக 307 பேருக்கும் குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

மேலும் இரட்டைக் கோடுகளில் முந்திச் சென்றதற்காக 304 பேருக்கும் அவசரத் தடத்தைப் பயன்படுத்தியதற்காக ஐவருக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

இந்த குற்றப்பதிவுகள் யாவும் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட ஓப் செலாமாட் இயக்கத்தின் போது வழங்கப்பட்டன என்று இங்குள்ள ஸ்கூடாய் டோல் சாவடியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் 2,110 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், அவற்றில் 18 மரண விபத்துகளாகும் என்றார்.

விபத்துகளில் பதிவான 18 உயிரிழப்புகளில் 14 மோட்டார் சைக்கிளோட்டிகளையும் நான்கு காரோட்டிகள் மற்றும் பயணிகளையும் உட்படுத்தியிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :