ECONOMYPENDIDIKAN

ஒரு முறை நியமனத் திட்டத்தின் கீழ் 2,400 ஒப்பந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்

கோலாலம்பூர், மே 12- ஒரு முறை மட்டுமே என்ற அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 18,702 காலி பணியிடங்களில் 2,400 இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பந்தம் காலாவதியாகும் ஒப்பந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

இத்திட்டத்திற்கு தேர்வான ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ ராட்ஸி ஜிடின் கூறினார்.

இதன் தொடர்பான அறிவிப்பை தாங்கள் கல்வி சேவை ஆணையத்திடமிருந்து (எஸ்.பி.பி.) அண்மையில்தான் தாங்கள் பெற்றதாக அவர் சொன்னார்.

தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் மே 31 ஆம் தேதிக்குள்ள கல்விச் சேவை ஆணையம் இந்த வாய்ப்பினை வழங்கும் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

ஒரு முறை மட்டுமே நியமனம் என்ற அடிப்படையில் கடந்த மே 11 ஆம் தேதி வரை 13,770 ஆசிரியர்கள் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள 2,500 இடங்கள் ஆங்கிலம், காட்சிக் கலைக் கல்வி மற்றும் சீன தேசிய மாதிரி பள்ளிகளில் போதிக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :