ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாடு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், மே 12- சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) 2022 வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி  முதல் 9 ஆம் தேதி வரை கோலாலம்பூர்  மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

இந்த நான்கு நாள் மாநாட்டின் போது 35 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தகத்தை பதிவு செய்ய முடியும் என்பதோடு சுமார் 30,000 வருகையாளர்களையும் ஈர்க்க இயலும் என எதிர்பார்க்கப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இவ்வாண்டு சிப்ஸ் மாநாடு மிகப்பெரிய நிகழ்வாக அமையும். கடந்த 2019 ஆம் ஆண்டில் 25 கோடி வெள்ளி வர்த்தகத்தை நாம் பதிவு செய்த அனுபவம் உள்ளதால் இம்முறை சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்வதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

இந்த மாநாடு ஹைப்ரிட் முறையில் அதாவது பேராளர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் வருகையாளர்களின் நேரடி பங்கேற்பு மீதே நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த  2015 ஆம் ஆண்டு முதல் இந்த சிப்ஸ் மாநாடு நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய டத்தோ தெங், ஆசியாவில் தேர்வுக்குரிய மற்றும் ஆக்கத்திறன் கொண்ட முதலீட்டு மையம் என்ற சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்துவதற்கு இந்த மாநாடு பெரிதும் துணை புரியும் என்றார்.

இவ்வாண்டிற்கான சிப்ஸ் மாநாடு ஆறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கும். சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (உணவு மற்றும பானங்கள்), சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (மருத்துவம்), சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சி ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.

 


Pengarang :