ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உத்வேகத்திற்கான தொடக்கப் புள்ளியாக விசாக தினம் விளங்குகிறது- மந்திரி பெசார் கருத்து

கோல லங்காட், மே 15- சமூகத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவற்கான தொடக்கப் புள்ளியாக விசாக தினம் விளங்குகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வர்ணித்துள்ளார்.

இன,சமய பல்வகை சூழலில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியப் பின்னர் இனங்களுக்கிடையே புரிந்துணர்வை நிலைநிறுத்துவதற்குரிய வாய்ப்பினை சமூகம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விசாக தினம் பௌத்த சமயத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து சமூகங்களுக்கும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. நாம் பல்லின மற்றும் சமய பின்னணியைக் கொண்ட சமூகத்தில்  வாழ்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது என்றார் அவர்.

நன்மைகளை அடைவதற்காக  இத்தகைய கருத்திணக்கங் உத்வேகத்தை வலுப்படுத்தினால் மாநிலம் சுபிட்சத்தையும் பிரகாசமான எதிர்காலத்தையும் காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள ஜென்ஜாரோம் ஃபூங் குவாங் ஷான் டோ ஸென் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான விசாக தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களிடையே காணப்படும் அமைதி, சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை காரணமாக சிலாங்கூர் ஈர்ப்புக்குரிய மாநிலமாக தொடர்ந்து விளங்கி வருகிறது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் சிலாங்கூரின் மக்கள் தொகை 46 லட்சம் பேராக இருந்தது. நான் மந்திரி பெசாராக பதவியேற்ற போது அந்த எண்ணிக்கை 65 லட்சமாக உயர்ந்து விட்டது. அண்மையில் மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை கூறுகிறது என்றார் அவர்.


Pengarang :