ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் வெள்ளம்- பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்புரவு செய்வதில் டீம் சிலாங்கூர் உதவி

ஷா ஆலம், மே 17– உலு சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் துப்புரவு செய்யும் பணியை மேற்கொள்வதற்காக டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் களம் இறங்கினர்.

சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (உப்சி) மாணவர்கள், களும்பாங் குருத்வாரா சஹிப் சீக்கிய ஆலயத்தின் உள்ளிட்ட தரப்பினரும் இப்பணியில் தங்களுக்கு உதவி புரிவதாக அந்த தன்னார்வலர் அமைப்பின் தலைமைச் செயலக பொறுப்பாளர் ஷியாஸெல் கெமான் கூறினார்.

இந்த துப்புரவுப் பணி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நீடித்தது. கம்போங் ஜாவா மற்றும் கெர்லிங் அருகே உள்ள கம்போங் பாசீர் ஆகிய இடங்களில் இந்த துப்புரவுப் பணியை மேற்கொண்டோம் என அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 15 வீடுகள், சூராவ் மற்றும் பாலாய் ராயா ஆகிய இடங்கள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. எங்களின் இந்த பணி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என்றார் அவர்.

நேற்று நண்பகல் 12.00 தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்திற்கு நீடித்த அடை மழை காரணமாக உலு சிலாங்கூரில் கிட்டத்தட்ட 20 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

கோல குபு பாரு, கம்போங் பெர்த்தாக், பாத்தாங் காலி ஆறுகளில் நீர் மட்டம் வழக்கதைக் காட்டிலும் அபரிமிதமாக உயர்வு கண்டதைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :