ECONOMYMEDIA STATEMENT

மாணவி உள்பட ஐந்து நண்பர்கள் கைது- வெ. 200,000 போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், மே 19- இரு தினங்களுக்கு முன்னர் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மூன்று இடங்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் கடந்த ஈராண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும்  பள்ளி மாணவி ஒருவர் உள்பட ஐந்து சகாக்களை கைது செய்துள்ளனர்.

ஜாலான் கூச்சிங்  மற்றும் ஜாலான் செமோரிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள வீடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 14 முதல் 34 வயதுடைய அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி போ எங் லாய் கூறினார்.

இக்கும்பலிடமிருந்து 500 லிட்டர் மெதிலேனடியோக்சி மெத்தம்பெத்தமின் (எம்.டி.எம்.ஏ.), 7,000 மில்லி லிட்டர் அளவு கொண்ட 10 கெத்தும் பான பொட்டலங்கள், 54 போத்தல் எம்.டி.எம்.ஏ. போதை மருந்து, 410 லிட்டர் அளவு கொண்ட 41 போத்தல் எம்.டி.எம்.ஏ. போதை மருந்து ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

கைதான அந்த ஐவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் 24 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கும்பலின் இதர உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் போதைப் யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறிவதற்கு அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சந்தேகப்பேர்வழிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் ஒருவர் மட்டுமே போதைப் பொருள் பழக்கம் உள்ளவர் என்பது கண்டறியப்பட்டதாக கூறிய அவர், மேலும் இருவர் போதைப் பொருள் தொடர்பில் குற்றப்பதிவை கொண்டுள்ளனர் என்றார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 210,570 வெள்ளி என்பதோடு அதனை 1,121 போதைப் பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :