ECONOMYHEALTHSELANGOR

இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்பீர்- தாமான் டெம்ப்ளர் மக்களுக்கு கோரிக்கை 

ஷா ஆலம், மே 20- கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தவிர்ப்பதற்கு ஏதுவாக “சிலாங்கூர் சாரிங்“ இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு தாமான் டெம்ப்ளர் தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை மாநில அரசின் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் வழங்குவதால்  பொது மக்கள் அந்த வாய்ப்பினை வீணடிக்க க்கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தங்கள் உடல் நிலை குறித்து தெளிவான விபரங்களைப் பெற முடியும். தாங்கள் ஆரோக்கியமாக உள்ளதாக அவர்கள் இவ்வளவு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இந்த பரிசோதனையின் வழி நோய் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும் என்றார் அவர்.

வயது ஆக ஆக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் நம்மைத் தாக்கக்கூடும். இந்நோய்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் குறைந்தபட்சம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.

தாமான் டெம்ப்ளர் தொகுதி நிலையிலான “சிலாங்கூர் சாரிங்“ இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறிய அவர், இந்த இயக்கம் நடைபெறவுள்ள இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாகவும் selangorsaring.selangkah.my என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :