ANTARABANGSAECONOMYTOURISM

துபாய் வர்த்தக கண்காட்சியில் வெ.96 கோடி வர்த்தக வாய்ப்புகளை சிலாங்கூர் பதிவு செய்தது

ஷா ஆலம், மே 20– இவ்வாண்டு மார்ச் 6 முதல் 12 வரை  துபாயில் நடைபெற்ற ‘’மிங்கு சிலாங்கூர்@ துபாய் எக்ஸ்போ 2020’’ எனும் வர்த்தக கண்காட்சியில் 96 கோடியே 70 லட்சம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளை சிலாங்கூர் பதிவு செய்தது.

இது தவிர அந்த வர்த்தக கண்காட்சியில் 158 ஈடான வர்த்தக வாய்ப்புகளையும் பல்வேறு துறைகளில் 92 வர்த்தக ஒத்துழைப்புக்கான சாத்தியங்களையும் மாநிலம் பதிவு செய்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மீது வர்த்தக உலகம் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த அடைவு நிலை பிரதிபலிக்கிறது என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

அந்த கண்காட்சியில் தொழில்துறையை அடிப்படையாக கொண்ட ஐந்து திரட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங்  சாங் கிம் முன்னதாக கூறியிருந்தார்.

மின்னியல், மின்சாரம், உயிரியல் தொழில்நுட்பம், வான் போக்குவரத்து, இயந்திரவியல், உபகரணம், உணவு மற்றும் பானத் தயாரிப்பு ஆகியவையே அத்துறைகளாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :